தேசிய செய்திகள்

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் கியாஸ் இணைப்பை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு சலுகை..!

ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சமீபத்தில் கியாஸ் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொண்டது.

புதுடெல்லி,

வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் கியாஸ் இணைப்புகளை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்து உள்ளது.

குழாய் மூலம் கியாஸ்

இந்தியாவில் எல்.பி.ஜி. எனப்படும் திரவ பெட்ரோலிய கியாசை மக்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த கியாஸ், சிலிண்டர்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த கியாசுக்கு இந்தியா பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே இருப்பதால், புவிசார் அரசியல் பதற்றத்தின்போது உள்நாட்டில் கியாஸ் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சமீபத்தில் கூட இந்த தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொண்டது.

எனவே குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாக கியாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதில் பி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவானது குழாய் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வினியோகிக்கப்படுகிறது.

ஊக்கத்தொகை சார்ந்த சலுகை

மேலும், பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பாதுகாப்பான, தூய்மையான எரிவாயு என்பதால், கார்பன் உமிழ்வு குறைவதுடன், மாசுபாடும் தவிர்க்கப்படுகிறது.

இவ்வாறு பி.என்.ஜி இணைப்புகளால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதால் கியாஸ் சிலிண்டர் முறையில் இருந்து முற்றிலும் நேரடி குழாய் இணைப்புக்கு மாறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

எனவே இந்த குழாய் கியாஸ் இணைப்புகள் வழங்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதற்காக, நகர வினியோகஸ்தர்களுக்கு தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஊக்கத்தொகை சார்ந்த சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது.

அரசு கூடுதலாக வழங்கும்

அதன்படி புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டு குழாய்வழி கியாஸ் இணைப்புக்கும், நகர எரிவாயு வினியோகஸ்தர்களுக்கு கூடுதலாக 200 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (எஸ்.சி.எம்.) குறைந்த விலையிலான வீட்டு உபயோக இயற்கை எரிவாயுவை அரசு கூடுதலாக வழங்கும்.

மத்திய அரசு ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த சலுகை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு வரம்புக்கு மேல் உள்ள கூடுதல் வீட்டு உபயோக குழாய் சமையல் எரிவாயு அல்லது குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

1.74 கோடி பி.என்.ஜி. இணைப்புகள்

செயலற்ற மற்றும் கட்டணம் வசூலிக்கப்படாத இணைப்புகளை செயல்படும் இணைப்புகளாக மாற்றுவதையும், பி.என்.ஜி நெட்வொர்க்கை புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 1.74 கோடி உள்நாட்டு பி.என்.ஜி. இணைப்புகள் உள்ளன.