தேசிய செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்: ராகுல் காந்தி கைது

ராகுல் காந்தி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் அதிகாரியின் ராஜினாமாவை கோரி நடைபெற்ற போராட்ட பேரணியின் போது, ​​தடுப்புகளை மீறி நுழைய முயன்ற பல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை புதுடெல்லியில் காவல்துறை கைது செய்தனர்.

புதுடெல்லியில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியும் ஒருவர், ஆனால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முறைகேடுகள்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயம் அளிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவில் முறைகேடு செய்வதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவர் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம்பாவிதம் தவிர்க்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்

இந்தநிலையில், இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. கோரிக்கை அடங்கிய பதாகைகளுடன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பியபடி, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி சென்றனர்.

டெல்லி காவல்துறை

தேர்தல் ஆணையம் செல்லும் வழியில், நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அலுவலகம் அருகே எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் களேபரம் ஏற்பட்டது.

பின்னர், தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை அடைய முயன்ற ​​ ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் சில ஆதரவாளர்களுடன் ஆகாஷ்வாணி பவன் வளாகத்தின் கீழ் ஒரு தளத்தில் நுழைந்தனர். முன்னதாக, நிதி ஆயோக் அலுவலகம் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

SCROLL FOR NEXT