புதுடெல்லி,
ரஷியா - உக்ரைன் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,
* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
* இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்.
* இந்தியா-உக்ரைன் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்தோம்.
* தற்போதைய மோதல் மற்றும் அமைதியை மீட்டெடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நன்றி தெரிவித்தேன்.
* மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வை காண்பதற்கு இயன்ற அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்; மோதல் தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து அவருக்கு விளக்கமளித்தேன். உக்ரைன் எப்போதும் ஆக்கபூர்வமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்துள்ளது. ரஷியாவும் பதற்றத்தைக் குறைப்பதற்கான அதே மனநிலையை வெளிப்படுத்த வேண்டும்.
போரைத் தொடர வேண்டிய நேரமிது அல்ல, அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் இது. கருங்கடல் வழியாக ரஷியா தானிய ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தி இருப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
கடல் வழித்தடங்கள் முடக்கப்பட்டிருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதையும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் துன்புறுவதையும் ரஷியா புரிந்துகொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ரஷியா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.