தேசிய செய்திகள்

சந்தையை சீர்குலைக்கும் அதிகப்படியான உற்பத்தி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 25 சதவீத வரியும், ஒப்பந்தம் கையொப்பமானால் 17 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்காவின் அதிகப்படியான உற்பத்தி குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிக வரி

அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மானியங்கள் மூலம் உபரி உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறி இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 14 நாடுகளின் பொருட்கள் மீது புதிய திருத்தப்பட்ட இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தக பிர திநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளது. இதன்படி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 25 சதவீத வரியும், ஒப்பந்தம் கையொப்பமானால் 17 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5-ந்தேதிக்குள்

இந்த பட்டியலில் தைவான், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென்கொரியா, வங்காளதேசம், ஜப்பான் ஆகியவையும் அடங்கும். இந்த புதிய வரி விதிப்பு முன்மொழிவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதிக்குள் எழுத்துபூர்வமாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், இதுகுறித்த பொது விசாரணை ஜனவரி 25-ந்தேதி நடைபெறும் எனவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியாவை சார்ந்து

இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், "பல ஆண்டுகளாக அமெரிக்க வர்த்தக கூட்டாளிகளில் பல நாடுகள் உற்பத்தி துறையை குறிவைத்தல், ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குதல், நிதியுதவி மற்றும் பிற சலுகைகளை வழங்குதல், சந்தை விதிகளுக்கு புறம்பான உள்ளீடுகள், சந்தையை சீர்குலைக்கும் பிற நடைமுறைகளை அடிப்படையாக கொண்ட தொழில் கொள்கைகள் போன்றவற்றை பின்பற்றி வருகின்றன. இதனால் நிலவும் வர்த்தக சமநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதோடு, ' அமெரிக்காவின் உற்பத்தி தளத்தையும் சிதைத்து வருகின்றன. மருந்து பொருட்கள், ஸ்டீல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற துறைகளில் இந்தியா வர்த்தக உபரியை ஈட்டுகிறது. இது சில முக்கிய துறைகளில் இந்திய உற்பத்தியை அமெரிக்கா சார்ந்திருப்பதை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இதற்கிடையில் இந்தியாவில் உற்பத்தி திறன் மிக அதிகமாக இருப்பதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வர்த்தக அமைச்சகம் கூறும்போது, “எந்தவொரு உற்பத்தி துறையிலும் அத்தகைய சூழல் இல்லை. வர்த்தகம் தொடர்பான அனைத்து சிக்கல்களையும், இந்தியா- அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான தற்போதைய பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் உற்பத்தி திறன் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நடத்திய விசாரணையின் போது இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கியது. தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. எந்தவொரு உற்பத்தி துறையிலும் இந்தியாவில் கட்டமைப்பு ரீதியான மிகை உற்பத்தித்திறன் இல்லை என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது” என கூறி உள்ளது.

SCROLL FOR NEXT