தேசிய செய்திகள்

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பிய இந்தியா

‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ என்ற திட்டத்தின்கீழ் வெனிசுலா மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த 24-ந்தேதி மாலை, ரிக்டர் 7.2 மற்றும் ரிக்டர் 7.5 என்ற அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து பயங்கர சேதம் ஏற்பட்டது.

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 1,450 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுமார் 774 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள வெனிசுலாவுக்கு சர்வதேச நாடுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில், இந்திய அரசு ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Operation Amistad) என்ற திட்டத்தின்கீழ், வெனிசுலா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுவினரை வெனிசுலாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா அனுப்பி வைத்த நிவாரண உதவிகள் வெனிசுலாவை சென்றடைந்துள்ளன. இந்த மனிதாபிமான உதவியானது அங்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய விமானப்படை ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு இந்திய விமானப்படை சி-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள், டெல்லியில் இருந்து கராகஸ் வரை 14,000 கி.மீ.க்கும் அதிகமான வான்வழி தூரத்தைக் கடந்து, வெனிசுலாவிற்கான சவாலான 23 மணி நேரப் பயணத்தை நிறைவு செய்துள்ளன.

கடல்கடந்த இந்த ராணுவ நடவடிக்கை, ஒரு பொறுப்பான முதல்நிலை மீட்பாளராகவும், நம்பகமான மனிதாபிமான கூட்டாளியாகவும் திகழ்ந்து வரும் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த கடினமான நேரத்தில் வெனிசுலா அரசு மற்றும் வெனிசுலா மக்களுடன் இந்தியா தோளோடு தோள் நின்று ஆதரவு வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.