புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-
“எல்லோர் மனதிலும், நாம் ஏன் உலகின் நம்பர் 1 நாடாக வேண்டும்? என்ற ஒரு கேள்வி உள்ளது. இதற்கு மிகவும் எளிமையான, நேர்மையான மற்றும் கலாசாரம் சார்ந்த ஒரு காரணம் உள்ளது. நாம் யாருக்கும் நிபந்தனைகள் விதிப்பதில்லை. அதேபோல், இந்தியா என்னை செய வேண்டும் என்பது குறித்தும் யாரும் நமக்கு நிபந்தனை விதிக்கக் கூடாது. அதற்கு நாம் உலகின் நம்பர் 1 நாடாக வேண்டியது அவசியம்.
வளர்ச்சி பெற்ற இந்தியா, தனது சுதந்திர நூற்றாண்டு விழாவை நம்பிக்கை, திறன் மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்துடன் கொண்டாட விரும்புகிறது. பிறருக்கு உதவுவது நமது கலாசாரத்தின் மிக இன்றியமையாத பகுதியாகும். அனைவரையும் ஒன்றிணைப்பதும் நமது கலாசாரத்தின் சாராம்சம் ஆகும்.
இந்த தேசிய லட்சியத்தை நனவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரதமரின் முயற்சிகளால், கடந்த 12 ஆண்டுகளில் உயர்கல்வித்துறை மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
2014-ல் 760 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1,400 ஆக உயர்ந்திருந்தது. அதேவேளையில், ஐ.ஐ.டி.-களின் எண்ணிக்கை 16-ல் இருந்து 23 ஆகவும், ஐ.ஐ.எம்.-களின் எண்ணிக்கை 13-ல் இருந்து 22 ஆகவும், எய்ம்ஸ் கல்லூரிகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 13 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கையும் 2014-ல் 3.42 கோடியில் இருந்து தற்போது 4.5 கோடியாக உயர்ந்துள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்களை விட மாணவிகள் அதிகப் பதக்கங்களை வென்று வருகின்றனர். இது இந்தியாவில் வளர்ந்து வரும் மகளிர் சக்தியின் தெளிவான சான்றாகும். பெண்களுக்கு முறையான கல்வி அளித்தால், அவர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.