புதுடெல்லி
தென்கொரியாவின் ஜனாதிபதியாக கடந்த 2025-ம் ஆண்டு பொறுப்பேற்று கொண்ட லீ ஜே மியுங் இந்தியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று புதுடெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 8 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த முதல் ஜனாதிபதி என்ற வகையில், அவருடைய வருகை பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை இடம் பெறும் என தகவல் வெளியானது. அவர், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் டெல்லியில், பிரதமர் மோடி மற்றும் லீ ஜே மியுங் இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, போராட்டம், சேவை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கொண்ட தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் வாழ்க்கையானது ஓர் உந்துதலுக்கான எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தந்துள்ள அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு சவாலும், மக்களுக்கு சேவையாற்றும் அவருடைய மனவுறுதியை வலுப்படுத்த மட்டுமே செய்தது என மியுங்கை பாராட்டி பேசினார்.
நம் இரு நாடுகளின் மரபணுக்களிலும் ஜனநாயக மதிப்புகள், சந்தை பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் விதியில் மதிப்பு கொள்ளுதல் ஆகியவை பொதிந்து உள்ளன என்றார்.
தென்கொரிய ஜனாதிபதியின் இந்த பயணத்தில், சிப்புகள் முதல் கப்பல்கள் வரை, திறமை முதல் தொழில் நுட்பம் வரை, சுற்றுச்சூழல் முதல் எரிசக்தி வரை என ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாம் ஏற்படுத்துவோம். இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றை ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவோம் என்று பேசினார்.
இந்தியா மற்றும் தென்கொரியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் ரூ.2.51 லட்சம் கோடியாக தற்போது உள்ளது. இதனை 2030-ம் ஆண்டில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரிக்க செய்வதற்கான பல்வேறு முக்கிய முடிவுகளை நாங்கள் இன்று எடுத்திருக்கிறோம் என்றார். வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த, தொழில் ஒத்துழைப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இதன்பின்பு, இந்திய-கொரிய வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசிய தென்கொரிய ஜனாதிபதி லீ, இரு நாடுகள் இடையே கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் பல்வேறு துறைகளில் இந்த ஒத்துழைப்பை நாம் விரிவுபடுத்துவோம் என நம்புகிறேன் என்றார்.
நிலையான மற்றும் நீடித்த கூட்டுறவு உள்ளது என கொரிய மற்றும் இந்திய நிறுவனங்கள் உணருவதற்காக, ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த, கொரியா-இந்தியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். மிக விரைவில், ஸ்திரத்தன்மை வாய்ந்த முடிவுகளை உருவாக்க நானும், பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்துள்ளோம் என்றார்.
நம்முடைய இருதரப்பு வர்த்தக அளவானது, இந்திய பொருளாதாரத்தின் அளவு மற்றும் சக்தி ஆகியவற்றை முழு அளவில் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. இந்தியாவிடம் வளர்ச்சிக்கான முக்கிய இடம் உள்ளது. அதனால், வருகிற ஆண்டுகளில் நம்முடைய வர்த்தகம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார். ஏ.ஐ. மற்றும் மென்பொருள் வளர்ச்சியில் இந்தியா உலக தரத்திலான வலுவுடன் உள்ளது.
கொரியாவோ உற்பத்தி, குறை கடத்திகள், பேட்டரிகள், தானியங்கி துறைகள் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளில் வலுவான திறனுடன் உள்ளது என்று கூறினார். உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளுக்கான திட்டத்தில் வருங்காலத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். வலுவான ஒத்துழைப்பே, தற்போதுள்ள உலகளாவிய சூழலில் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.