தேசிய செய்திகள்

3 அதிநவீன ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா

நீண்ட தூர மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அச்சுறுத்தல்களை விண்வெளியிலும், வளிமண்டலத்திலும் இடைமறித்து அழிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது

புதுடெல்லி,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து 3 அதிநவீன ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது.ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு என வகைப்படுத்தப்பட்ட 2 மேம்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகளை சோதித்தது.இந்த இடைமறிப்பு ஏவுகணைகள் வளிமண்டலத்திற்குள் மற்றும் வெளியே 2 ஆயிரம் கி.மீ. முதல் 5 ஆயிரம் கி.மீ. வரையிலான தூரத்தில் உள்ள எதிரியை கண்டறிந்து பின்தொடர்ந்து செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏவுகணைகள்

இந்த சோதனையில் இடைமறிப்பு ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்கின. நீண்ட தூர மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அச்சுறுத்தல்களை விண்வெளியிலும், வளிமண்டலத்திலும் இடைமறித்து அழிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.மேலும் கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனை நிரூபிக்கும் வகையில் கடற்படை தளத்தில் இருந்து ஏவுகணை முதல்முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.இந்த ஏவுகணை கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று எதிரிகளின் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. ஏவுகணை சோதனை வெற்றிக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

இலக்குகளை துல்லியமாக

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:-

சோதனை நடத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கின. வளர்ந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த அமைப்புகள் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வரையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடுகளின் உயர்மட்டக் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தனது நடுத்தர தூரத்தின் முதல் விமானப் பரிசோதனையின் போது நடுத்தர தூரத்தில் கப்பல்களைத் தாக்கும் திறனை நிரூபித்தது.இவ்வாறு அவர் கூறினார்.