தேசிய செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்ட மத்திய அரசு

ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

டெல்லி,

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, அரபிக்கடலில் ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அதேவேளை, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் நேற்று திறந்தது.

இதையடுத்து அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக ஆசியா உள்பட உலகின் பிற பகுதிகளுக்கும் மீண்டும் பயணத்தை தொடங்கின. அதேவேளை, ஈரானின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததற்கு பதிலடியாக ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

இதனிடையே, ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுக்கொண்டு இன்று 2 இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தன. அப்போது, இந்திய கப்பல்களை குறிவைத்து ஈரான் புரட்சிகர காவல்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

லரக் தீவு அருகே நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கப்பல்களில் பயணித்த மாலுமிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹர்முஸ் ஜலசந்தியில் இருந்து திரும்பிச்சென்றன.

இந்நிலையில், ஹர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஈரானிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT