தேசிய செய்திகள்

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

யந்திரா இந்தியாவின் இஷாபூரில் ரூ.750 கோடிக்கு மேல் முதலீட்டில் 2 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

கொல்கத்தா,

இந்தியா உலகின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக உருவாகும் திறன் கொண்டது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

கப்பல் கட்டும் தளம்

மேற்கு வங்காளத்தில் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் (ஜி.ஆர்.எஸ்.இ.) கப்பல் கட்டும் தளம். மற்றும் யந்திரா இந்தியா நிறுவனத்தின் 5 விரிவாக்கத் திட்டங்கள் இதில் அடங்கும். அடிக்கல் நாட்டிய பின்னர் ராஜ்நாத் சிங் பேசும்போது கூறியதாவது:-

கப்பல் கட்டுமான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. பாரம்பரியமாக கப்பல் கட்டுமானத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன.

நாட்டில் அதிகளவிலான தொழிலாளர்கள், உருக்கு நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் இருப்பதால் இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

திட்டங்கள்

ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனம் ஹூக்ளி ஆற்றின் இருபுறங்களிலும் 2 சிறிய கப்பல் கட்டும் தளங்களையும், ராய்சாக்கில் 32 ஏக்கர் பரப்பிலான இடத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதில் ரூ.2,500 கோடிக்கு மேல் முதலீடு செய்து கப்பல் கட்டுமான மையம் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல யந்திரா இந்தியாவின் இஷாபூரில் ரூ.750 கோடிக்கு மேல் முதலீட்டில் 2 புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பையும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.