புதுடெல்லி,
உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அறிவியல்பூர்வமான கொள்கைகள் மற்றும் வலுவான நிர்வாக அமைப்புகள் மூலம் உலக அளவில் புலிகள் பாதுகாப்பில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் காடுகளில் வாழும் புலிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. நாடு முழுவதும் புலிகளை பாதுகாக்க 55-க்கும் மேற்பட்ட பிரத்யேக புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்தியா காலக்கெடுவுக்கு முன்பே எட்டி சாதித்துள்ளது.
புலிகளின் உடலில் உள்ள தனித்துவமான கோடுகளை கொண்டு ஒவ்வொரு புலியும் துல்லியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தியாவின் அதிநவீன கேமரா டிராப் வனவிலங்கு கணக்கெடுப்பு முறை, உலகிலேயே மிக துல்லியமான கண்காணிப்பு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வங்க புலி 1972-ம் ஆண்டில் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டு, நாட்டின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலிகளை பாதுகாப்பது, வெறும் விலங்கின பாதுகாப்பு மட்டுமல்ல; அது நம் காடுகள், ஆறுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் முழுவதையும் பாதுகாப்பதோடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொருளாதாரத்திற்கு தேவையான இயற்கை ஆதாரங்களையும் கச்சிதமாக உறுதி செய்கிறது.
இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டில் 1,411 ஆக இருந்த நிலையில், 2022-ம் ஆண்டின் அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின்படி 3,682 ஆக இரட்டிப்பாகியுள்ளது. 2022-ம் ஆண்டின் இந்த மதிப்பீடானது 20 மாநிலங்களில் 6.41 லட்சம் கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மேற்கொள்ளப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆய்வாகும்.
எம்-ஸ்ட்ரைப்ஸ் என்ற மொபைல் செயலி மூலம் செயற்கைக்கோள் வரைபடம், புவியியல் இருப்பிட (ஜியோ டேக்) அடிப்படையில் கள கண்காணிப்பு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகிலேயே மிகப்பெரிய அளவில் கேமராக்கள் மூலம் துல்லியமாக புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.
உலக அளவில் புலிகள் பாதுகாப்பில் சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி, பனிச்சிறுத்தை, ஜாகுவார், பூமா ஆகிய 7 வகை புலியினங்களை பாதுகாக்க ‘சர்வதேச பிக் கேட்ஸ் அலையன்ஸ்’ என்ற அமைப்பை இந்தியா முன்னின்று தொடங்கியுள்ளது.
புலிகள் பாதுகாப்பிற்காக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘புலிகள் திட்டம்’ மூலமாக 18 மாநிலங்களில் 58 புலிகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 84,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காப்பகங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 2.56 சதவீதமாகும். இத்திட்டத்தின் செயல்பாடுகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணித்து வருகிறது.