தேசிய செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல் - முக்கிய அம்சங்கள் என்னென்ன...?

தொழில்துறை ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.11½ லட்சம் கோடி (120 பில்லியன் டாலர்) ஆக இரட்டிப்பாக்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்

இங்கிலாந்திற்கு ஏற்றுமதியாகும் 99 சதவீதப் பொருட்கள் மீதான சுங்கவரி முழுமையாக நீக்கப்படுகின்றன. இதனால் இரு​ நாடு​களுக்​கு இடையி​லான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படு​கிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்​பந்​தம் ஜவுளித் துறை, ரத்​தினங்​கள் மற்​றும் நகைகள், மருந்​துத் துறை, வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் போன்ற முக்​கிய துறை​களுக்கு பெரும் நன்​மை​களை வழங்​கும் எனக் கருதப்படு​கிறது. மேலும், இந்​திய நுகர்​வோர் இங்​கிலாந்​தில் தயாரிக்கப்படும் கார்​கள் மற்​றும் விஸ்​கியை குறைந்த விலையில் பெறும் வாய்ப்​பும் உரு​வாகலாம். அதேசம​யம், சமையல் கலைஞர்​கள், யோகா பயிற்​சி​யாளர்​கள் போன்ற தொழில்​முறை நிபுணர்​கள் எளி​தான பயண வசதி​கள் மற்றும் விசா சலுகைகளால் பயன்​பெறலாம்.

முக்கிய அம்சங்கள் என்னென்ன...?

இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து விதிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான 70 சதவீதம் வரையிலான வரிகள், கடல்சார் பொருட்கள் மீதான 21 சதவீதத்துக்கும் அதிகமான வரிகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதான 18 சதவீத வரிகள், தோல் மற்றும் காலணி தயாரிப்புகள் மீதான 16 சதவீதம் வரையிலான வரிகள் மற்றும் ஜவுளி வகைகள் மீதான சுமார் 12 சதவீத வரிகள் ஆகியவை பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கும்.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, இரு நாடு​களுக்​கும் இடையேயான வாகன இறக்​குமதி வரி குறிப்​பிட்ட ஒதுக்கீடு​களின் கீழ் தற்​போதுள்ள சுமார் 110-லிருந்து 10 சதவீதம் ஆகக் குறைக்​கப்​படும். முதல் 15 ஆண்​டு​களில் 3.78 லட்​சம் யூனிட்​டு​கள் வரையி​லான வழக்​க​மான இன்​ஜின் கொண்ட இங்​கிலாந்​தின் பயணி​கள் கார்களை (வெகுஜன சந்தை மாடல்​கள் உட்​பட) சலுகை வரி​யில் இறக்குமதி செய்ய இந்​தியா அனு​ம​திக்​கும்.

இது​போல 20,000 முதல் 80,000 பவுண்டு வரையி​லான விலை வரம்பில் உள்ள இந்​திய மின்​சார, ஹைபிரிட் மற்​றும் ஹைட்​ரஜன் பயணி​கள் கார்​களுக்​கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்​லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த ஒதுக்​கீடு 15-வது ஆண்​டில் 88,000 யூனிட்​டு​களாக உயர்ந்​து, அடுத்​தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.

இது டாடா மோட்​டார்​ஸ், மஹிந்​திரா & மஹிந்​திரா மற்​றும் மாருதி சுசூகி போன்ற இந்​திய உற்​பத்​தி​யாளர்​களுக்கு பெரும் பயனளிக்கும். அதே​நேரம், உள்​நாட்டு வெகுஜன சந்தை மின்​சார வாகன பிரிவைப் பாது​காக்க இந்​தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 14 சுற்றுகளாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.