தேசிய செய்திகள்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் அமலாகும்; பியூஷ் கோயல்

இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார்.

டெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார்.

மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா மீது அபராத வரியாக 25 சதவீத வரி விதித்தார். இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்கா மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது.

இதனை தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டன.

அதன்படி, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உடன்பாடு எட்டப்பட்டதாக கடந்த 2ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி இரம்ப் அறிவித்தார். மேலும், இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்கா ரத்து செய்தது. வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக விரைவில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரும் 23ம் தேதி இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குழு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மீண்டும் சந்தித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

3 நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற உள்ளது.

இதையடுத்து, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும் என்றும் இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் அமலாகி நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் மார்ச் மாதம் இந்தியா வந்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.