தேசிய செய்திகள்

அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது; ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

“அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஆங்கில செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை உலகுக்கு தெரிவித்துள்ளது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது. அதேபோல் பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக இருக்க முடியாது.பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதில் இனி எந்த எல்லையும் இந்தியாவை தடுக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் பார்க்கப்படாது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதன் மூலம், “ரத்தமும், நீரும் ஒன்றாக பாய முடியாது” என்ற செய்தியையும் இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ‘லட்சுமண ரேகையை’ கடந்துவிட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவை, நாட்டின் தேசிய நலன்களை பாதுகாக்கும் திறனும் உறுதியும் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளன.

அமைதியை விரும்பும் நாடு

இந்தியா அமைதியை விரும்பும் நாடாக உள்ளது. மற்ற நாடுகளுடன் அமைதியான உறவுகளை பேணுவதையே விரும்புகிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்பில் யாரும் சமரசம் செய்ய அனுமதிக்காது.இந்தியா தர்மத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக மகாபாரதத்தையே எதிர்கொண்ட நாடு. எனவே, அமைதிக்கான இந்தியாவின் விருப்பத்தை பலவீனமாக யாரும் கருதிவிடக்கூடாது’ என்றார்.

SCROLL FOR NEXT