புதுடெல்லி
உக்ரைனில் அமைதிக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, டெல்லிக்கு இன்று வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைனில் காணப்படும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய உலகளாவிய புதிய முயற்சி பற்றியும் பேசப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் மோடி ஊடகங்களுக்கு வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியாவும், போலந்தும் இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய நட்புறவை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றார்.
பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணு சக்தி உள்ளிட்டவற்றில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளோம். இந்த எல்லா பிரிவுகளிலும், வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற போலந்து நாட்டிலுள்ள நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார்.
இரு நாடுகளும், ஜனநாயக மதிப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளன. உலகளாவிய நிர்வாக அமைப்புகளை அதிக சக்தி வாய்ந்த மற்றும் திறன் வாய்ந்த ஒன்றாக உருவாக்க சீர்திருத்தம் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், உக்ரைனோ அல்லது மேற்காசியாவோ, அமைதியை நோக்கிய அர்த்தமுள்ள ஒவ்வொரு முயற்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.