தேசிய செய்திகள்

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்வு

கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பணவீக்கமாகும்.

டெல்லி,

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் புள்ளி விவரத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. பொருட்களின் மொத்த விற்பனை விலையில் மாதம் தோறும் ஏற்படும் மாற்றத்தை அளவிட்டு அதன் புள்ளி விவரத்தை வெளியிடுவது இந்த புள்ளி விவரத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பணவீக்கமாகும்.

கடந்த மார்ச் மாதம் 3.88 சதவீதமாக இருந்த மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஏப்ரல் மாதம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏற்பட்டு மொத்த விற்பனை விலை பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த விற்பனை விலை பணவீக்கம் உயர்வால் காய்கறி, உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்துள்ளது.