தேசிய செய்திகள்

இந்திய விமானப்படையின் ‘ஆபரேஷன் தரங் சக்தி’ கூட்டு ராணுவ பயிற்சி - சர்வதேச நாடுகள் பங்கேற்பு

7 நட்பு நாடுகளின் அதிநவீன போர் விமானங்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

ஜோத்பூர்,

இந்திய விமானப்படை சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில், 'தரங் சக்தி-2026' என்ற பிரம்மாண்ட பலதரப்பு கூட்டு விமானப்படை பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஒத்துழைப்பில் வலிமை

சர்வதேச அளவில் நட்பு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை சார்பில், ‘ஆபரேஷன் தரங் சக்தி’ என்ற கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி "ஒத்துழைப்பில் வலிமை" என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது.

பல்வேறு நாடுகளின் விமானப்படைகள் இணைந்து செயல்படுவதன் மூலமும், நவீன போர் உத்திகள் மற்றும் நிபுணத்துவத்தை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன் மூலமும் கிடைக்கும் கூட்டு வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 நட்பு நாடுகள் பங்கேற்பு

இந்திய பெருங்கடல் மற்றும் சர்வதேச பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட பயிற்சியில், இந்தியாவின் அழைப்பை ஏற்று உலகின் முன்னணி வல்லரசு நாடுகளும் அண்டை நாடுகளும் களம் இறங்கியுள்ளன.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 7 நட்பு நாடுகளின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வான்படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

2-வது பதிப்பு

கடந்த 2024-ம் ஆண்டில் இந்திய வான்படை நடத்திய 'தரங் சக்தி' பயிற்சியின் முதல் பதிப்பு உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கூடுதல் பலத்துடனும், நவீனப் பாதுகாப்பு உத்திகளுடனும் 'தரங் சக்தி 2026' நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சியின் போது, வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிப்பது, எதிரி நாட்டு தாக்குதல்களை முறியடிப்பது போன்ற போர் பயிற்சிகள் மட்டுமின்றி, நட்பு நாட்டு வீரர்களுக்கு இடையேயான பல்வேறு தொழில்முறை ஆலோசனைகள், கலாசார பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு செயல்பாடுகளும் நடைபெறுகின்றன.

விமானங்கள்

இந்த பயிற்சிக்காக அமெரிக்கா F-35A லைட்னிங் II ரக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான இது இந்தியாவில் நடைபெறும் பயிற்சியில் முதல் முறையாக பங்கேற்கிறது. இதே போல் பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் F-16 விமானங்கள், ஆஸ்திரேலியாவின் KC-30A வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் A400M போக்குவரத்து விமானங்கள் ஆகியவை இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

அதே போல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30MKI, ரபேல் மற்றும் தேஜாஸ் விமானங்கள் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT