புதுடெல்லி,
ராணுவம் தொடர்பான சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புவோருக்கு எதிராக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்ததோடு, ‘எக்ஸ்’ தளத்தில் தனது அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக்கான பக்கத்தின் விவரங்களையும் வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதியின் டீப் பேக்(Deep Fake) வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து இந்திய அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் சார்பில் ‘எக்ஸ்’ தளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடராக பாதுகாப்பு அமைச்சகத்தின் (ராணுவம்) இந்திய தலைமையகத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவம் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள், வதந்திகள் குறித்த விளக்கங்கள் ஆகியவற்றை அறிய @MythbusterXX பக்கத்தை பின்தொடரவும். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.