புதுடெல்லி,
சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் வைப்புத் தொகையை சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் மொத்த வைப்புத்தொகை பணம் 2025-ம் ஆண்டில் 8 சதவீதம் சரிந்து 3.25 பில்லியன் சுவிஸ் பிராங்காக (ரூ.36 ஆயிரத்து 793 கோடி) குறைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்தப் பணம் குறைந்தாலும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நேரடி வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகை 50 சதவீதத்துக்கும் மேல் அதிரடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் நேரடி கணக்குகளில் 524 மில்லியன் சுவிஸ் பிராங்காக (ரூ.6 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது. இது மொத்தத் தொகையில் 16 சதவீதம் ஆகும்.
பிற உள்ளூர் கிளைகள்மற்றும் நிதி நிறுவனங்கள் வழியாக வைக்கப்பட்டிருந்த நிதி 15 சதவீதம் குறைந்து 2.6 பில்லியன் சுவிஸ் பிராங்காக (ரூ.25 ஆயிரத்து 480 கோடி) மாறியுள்ளது. இந்த பிரிவில் ஏற்பட்ட சரிவே ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும். அறக்கட்டளைகள் மூலமாக உள்ள நிதி 55 சதவீதம் குறைந்து 18.6 மில்லியன் சுவிஸ் பிராங்காகவும் (ரூ.218.29 கோடி), பத்திரங்கள் மற்றும் பத்திர வடிவங்களிலுள்ள தொகை 105.7 மில்லியன் சுவிஸ் பிராங்காகவும் (ரூ.1 ஆயிரத்து 241 கோடி) குறைந்துள்ளன.
சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள இந்தத் தரவுகள் அனைத்தும் வங்கிகள் முறைப்படி அரசுக்குத் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வர்த்தகப் பணப் பரிமாற்றங்கள் ஆகும். எனவே, இவற்றை இந்தியாவில் விவாதிக்கப்படும் சட்டவிரோத 'கருப்பு பணம்' என்று நேரடியாகக் கருத முடியாது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது மூன்றாம் நாடு நிறுவனங்கள் பெயரில் உள்ள கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினர் வைத்துள்ள பணத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் இந்தியா 46-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது (கடந்த ஆண்டு 48-வது இடத்தில் இருந்தது). இப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. அண்டை நாடுகளான வங்காளதேசம் 81-வது இடத்திலும், பாகிஸ்தான் 108-வது இடத்திலும் உள்ளன.