சென்னை,
உலக நாடுகளில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் புல்லட் ரெயிலை இந்தியாவில் இயக்கும் முயற்சியில் இந்திய ரெயில்வேத்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதில் மும்பை-ஆமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்துக்கு மணிக்கு 320 கிலோமீட்டர் முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் வகையில் ரெயில் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ள்து.
குஜராத்தின் சூரத் முதல் பிலிமோரா வரையிலான 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆகஸ்டு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், 2028-ம் ஆண்டுக்குள் முழு திட்டமும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புல்லட் ரெயிலுக்கு பெயர் போன ஜப்பான் நாட்டின் ஷின் கன்சென் தொழில்நுட்பத்திலான இந்த புல்லட் ரெயிலைதான் இந்தியா இயக்க உள்ளது.
அந்தவகையில் இந்த ரெயிலை இயக்குவது எப்படி? அந்த தொழில்நுட்ப செயல்பாடுகளின் விவரங்கள் ஆகியவற்றை குறித்து அறிந்துகொள்ள இந்திய ரெயில்வே மற்றும் மெட்ரோ நிறுவனங்களில் அனுபவம் வாய்ந்த 15 'லோகோ பைலட்'டுகள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சுமார் 13 முதல் 18 மாதங்கள் வரை பயிற்சி பெற இருக்கின்றனர். அதன்படி, ஜப்பான் நாட்டில் இந்திய லோகோ பைலட்டுகள் பயிற்சி பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.