கொச்சி,
இந்திய கடற்படையை உலக தரத்திற்கு வலிமைப்படுத்தும் நோக்கில், நவீன போர் ஆயுதங்களுடன் கூடிய 6 அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல்களை கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டுமான தள நிர்வாகத்துடன் கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2-வது அதிநவீன போர்க்கப்பலின் கட்டுமான பணிகள் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.
கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்லாக கருதப்படும் இந்த தொடக்க விழாவை, போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கொள்முதல் குழு துணை கட்டுப்பாட்டு அதிகாரியான ரியர் அட்மிரல் கபில் மேத்தா முறைப்படி இருப்பு வெட்டும் நிகழ்வுடன் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மிக முக்கிய உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல்கள், எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்கும் நவீன ஏவுகணைகள் மற்றும் ரேடார் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு அரண் மேலும் பல மடங்கு பலம்பெறும் என அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.