தேசிய செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல்: டிசம்பர் 5-ந் தேதி நடைபெறும்

தேர்தல் நடைமுறைகளை மேற்பார்வையிட தேர்தல் அதிகாரியாக டெல்லி முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்போதைய தலைவர் பி.டி. உஷா உள்ளிட்ட நிர்வாக குழுவினரின் 4 ஆண்டு பதவி காலம் வருகிற டிசம்பர் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் (2026-30), தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவதற்கு 5 நாட்களுக்கு முன்னதாக அதாவது டிசம்பர் 5-ந் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தலைமை தேர்தல் கமிஷனர்

தேசிய விளையாட்டு நிர்வாக சட்டம், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் விதிகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை மேற்பார்வையிட தேர்தல் அதிகாரியாக டெல்லி முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு மட்டுமின்றி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விளையாட்டு வீரர்கள் ஆணையத்துக்கான தேர்தலுக்கும் (நவம்பர் 3-ந் தேதி) மேற்பார்வை அதிகாரியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

'இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நல்ல நிர்வாகம், வெளிப்படையான செயல்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இந்த நிர்வாகிகள் தேர்தல் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்' என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT