புதுடெல்லி,
ரெயில் தண்டவாளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே சரக்கு ரெயில் பெட்டிகளை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க இந்திய ரெயில்வே புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய ரெயில்வே, தினமும் பல லட்சம் டன் எடையுள்ள அத்தியாவசிய பொருட்களை சரக்கு ரெயில்கள் மூலம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கிறது. இவ்வாறு பயணிக்கும் ரெயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும், திருட்டுகளை தடுப்பதும் எப்போதும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வந்துள்ளது. அந்த சவாலுக்குத் தீர்வாக, ஓடும் ரெயில்களிலேயே ஆய்வு மேற்கொள்ளும் அதிநவீன ஏ.ஐ. கேமரா தொழில்நுட்பத்தை இந்திய ரெயில்வே வெற்றிகரமாக செயல்படுத்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
'பிராஜெக்ட் திரிஷ்டி' எனும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத்தான் இந்தியன் ரெயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. வடகிழக்கு எல்லை ரெயில்வேயும், கவுகாத்தி ஐ.ஐ.டி.யும் இணைந்து இந்த அதிநவீன கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. ரெயில்வே தண்டவாள பாதைகளின் சில குறிப்பிட்ட இடங்களில் உயர்ரக கேமராக்களும், ஸ்மார்ட் விளக்குகளும் இதற்காக அமைக்கப்பட்டு, சரக்கு ரெயில்கள் தண்டவாளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இந்த கேமராக்கள் சரக்கு பெட்டிகளின் கதவுகள் பூட்டுகள் மற்றும் சீலிடப்பட்ட இடங்கள், பெட்டி எண் ஆகியவை படம்பிடிக்கப்படும்.
அவ்வாறு கேமராக்கள் எடுக்கும் படங்களை ஏ.ஐ. மென்பொருள் உடனுக்குடன் ஆய்வு செய்து, கதவு திறந்து இருக்கிறதா? சரியாக பூட்டப்படாமல் இருக்கிறதா? பூட்டுகள், சீல்கள் உடைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை சில வினாடிகளிலேயே கண்டறிந்து தெரிவித்துவிடும். இதற்கு முன்பு ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களை சுமந்து செல்லும் இந்த சரக்கு ரெயில்களை நிறுத்தி மனித உதவியுடன் ஒவ்வொரு பெட்டியாக சரிபார்க்கப்படும். இதில் தாமதமும் ஏற்படும். ஆனால் இப்போது அதற்கெல்லாம் தீர்வாகவும், வேகமாகவும் இந்த தொழில்நுட்பம் களம் இறக்கப்பட்டிருக்கிறது. எந்த காலநிலைகளிலும் இதன் பயன்பாடு நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அசாமில் உள்ள மாலிகான் ரெயில்வே தலைமையக பகுதியில் இந்த தொழில்நுட்பம் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் துல்லியத்தன்மை, செயல்பாடு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகு, இந்திய ரெயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் இதனை விரிவாக்கம் செய்ய ரெயில்வே திட்டமிட்டிருக்கிறது.