தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை: நாடு முழுவதும் 1,410 சிறப்பு ரெயில் சேவைகள்

பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில்வே துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் மார்ச் மாதம் கொண்டாடப் படும். வடமாநிலங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும் பகுதிகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையை முன்னிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வடமாநில மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது வழக்கம். இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில் களில் கூட்டம் அலைமோதும்.

எனவே பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில்வே துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 1410-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில் சேவைகளை நாடு முழுவதும் இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

மேலும் முக்கிய இடங்களுக்கு இடையே தேவைக்கு ஏற்ப ரெயில் சேவை அதிகரிக்கப்படும். இந்த சிறப்பு ரெயில்கள் எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படும்? எப்போது இருந்து இயக்கப் படும்? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.