தேசிய செய்திகள்

வளைகுடா பகுதியிலுள்ள இந்திய கப்பல்களும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: மத்திய அரசு தகவல்

இந்திய கொடியுடன் 20 கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் உள்ளன. அவற்றில் 540 இந்திய கப்பல் பணியாளர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.

புதுடெல்லி

டெல்லியில் நடந்த மந்திரிகள் அளவிலான விளக்க கூட்டத்தில் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்பு செயலாளர் ராஜேஷ் சின்ஹா இன்று பேசினார். அவர் கூறும்போது, பாரசீக வளைகுடாவில் இருந்து இந்திய கொடியுடன் கூடிய 2 எல்.பி.ஜி. சரக்கு கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி நோக்கி புறப்பட அனுமதிக்கப்பட்டன. பைன் கியாஸ் மற்றும் ஜெக வசந்த் ஆகிய அந்த 2 சரக்கு கப்பல்களும் பாதுகாப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து விட்டன. அவை இந்தியாவை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றன என்றார்.

வளைகுடா பகுதியில் உள்ள அனைத்து இந்திய கப்பல்களும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கடல்சார் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றார். தற்போது, இந்திய கொடியுடன் 20 கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் உள்ளன. அவற்றில் 540 இந்திய கப்பல் பணியாளர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனினும், நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துக்கான அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில், 92,612 டன் எல்.பி.ஜி.யுடன், இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை நேற்று மாலை கடந்துள்ளன. அந்த கப்பல்களில் முறையே 27 மற்றும் 33 இந்திய பணியாளர்கள் உள்ளனர். அவை இரண்டும் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வருகிற 26 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு இடையே அவை துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.