புதுடெல்லி
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்ற நிலை காணப்படுகிறது. வான், கடல் வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேற்காசிய மோதலால் கடினம் வாய்ந்த சூழல் ஏற்பட்டபோதும் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி கோயல் இன்று பாராட்டி பேசியுள்ளார்.
அவர் மக்களவையில் இன்று உரையாற்றும்போது, கடந்த பிப்ரவரியில், சரக்குகளின் ஏற்றுமதி மற்றும் சேவைகளில் வளர்ச்சியானது சரிவு காணவில்லை. அதனுடன், மார்ச் முதல் வாரத்தில் சற்று பலவீனமடைந்திருந்தபோதும், 2-ம் வாரத்தில் நேர்மறையான வளர்ச்சியும் சீராக முன்னேற்றம் கண்டுள்ளது என்றார். இந்த மாத இறுதிக்குள் ஏற்றுமதியை சீராக பராமரிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.
சேவை துறையில் கடந்த 3, 4 ஆண்டுகளாக அபரிமித வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். போட்டி நிறைந்த உலகளாவிய சந்தையில் வாய்ப்புகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா விரிவான ஏற்றுமதி வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.