தேசிய செய்திகள்

‘இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ - மத்திய அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கான தேவையற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய மற்றும் மேற்கு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும், அந்நாடுகளுக்குத் தேவையற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியக் குடிமக்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மறு அறிவிப்பு வரும் வரை, இஸ்ரேலுக்குள் அத்தியாவசியமற்ற மற்றும் தேவையற்ற அனைத்துப் பயணங்களையும் இந்தியக் குடிமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குடிமக்கள் உள்ளூர் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசரகால எச்சரிக்கைகளைத் தவறாமல் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.