தேசிய செய்திகள்

‘இந்தியாவின் லட்சியங்கள் இனி அதன் எல்லைகளுக்குள் அடங்கி இருக்காது’ - பிரதமர் மோடி

இந்தியர்களின் முயற்சிகள் எல்லையற்றதாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்டர்டேம்,

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடந்த நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவற்றை அவர் கண்டு களித்தார்.

இதன்பின்னர், நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் திரளாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இந்தியா பெரிய கனவுகளைக் காண்கிறது. இந்திய இளைஞர்கள் வானத்தை எட்ட விரும்புகிறார்கள். இன்று இந்தியா, 'எங்களுக்கு மாற்றம் மட்டும் போதாது, சிறந்தது வேண்டும், அதிவேகமானது வேண்டும்' என்று சொல்கிறது. அதனால்தான் இந்தியர்களிடம் எல்லையற்ற லட்சியங்கள் இருப்பதால், அவர்களின் ​​முயற்சிகளும் எல்லையற்றதாக மாறி வருகின்றன.

இன்றைய இந்தியா, முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்தியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு முன்பாக, ஜி20 மாநாட்டையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இது ஒருமுறை நடந்த நிகழ்வு அல்ல. இதுவே இன்றைய இந்தியாவின் இயல்பாக மாறிவிட்டது.

இந்தியாவின் லட்சியங்கள் இனி அதன் எல்லைகளுக்குள் அடங்கி இருக்காது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும், உலகளாவிய உற்பத்தி மையமாக திகழவும், பசுமை ஆற்றலில் முன்னணி நாடாக உருவெடுக்கவும், உலகின் வளர்ச்சி இயந்திரமாகத் திகழவும் இந்தியா விரும்புகிறது.

இன்று, நமது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை செய்து வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மேலும் விரிவடைந்து வருகிறது. லட்சியங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் அதன் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.