புதுடெல்லி
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்தியாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, கொல்கத்தாவுக்கு வருகை தந்த அவர் அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்திற்கும், பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முக்கிய தொழில் நுட்பங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரூபியோ பேசினார். இது ஆக்கப்பூர்வ சந்திப்பாக இருந்தது என அமெரிக்க தூதர் கோர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து ரூபியோ பேசினார். அவர்கள் இருவரும் இணைந்து இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர், தற்போது காணப்படும் உலகளாவிய சவால்களில் இந்தியாவின் அணுகுமுறையை பற்றி குறிப்பிட்டார்.
அவர் பேசும்போது, மோதல்களை தீர்க்க நான் 5 விசயங்களை பற்றி கூறுகிறேன். ஒன்றாவது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். இரண்டாவது, நாங்கள் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்சார் வர்த்தகத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மூன்றாவது, சர்வதேச சட்டத்திற்கு நேர்மையான முறையில் மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
அப்போது அவர் உலக பொருளாதார ஆபத்துகளை குறைப்பதற்கான கட்டமைப்பில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்றார். நான்காவது, சந்தை பங்குகள் மற்றும் வளங்களை ஆயுதமயம் ஆக்கும் விசயங்களுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்.
கடைசியாக, உலக பொருளாதார ஆபத்துகளை குறைப்பதற்காக, நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டாண்மைக்கான மதிப்புகள் மற்றும் வினியோக சங்கிலிகளை மீட்டெடுப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார். சரியான தருணத்தில் ரூபியோவின் இந்த பயணம் அமைந்துள்ளது என்று கூறிய அவர், இரு தரப்பிலும் நடந்த ஆலோசனைகள் மிக ஆக்கப்பூர்வ முறையில் இருந்தன என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவியேற்ற பின்பு மார்கோ ரூபியோ இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். அவர், ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளார். டெல்லியில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.