புது டெல்லி,
இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24, 2025 அன்று இஸ்ரோ தனது முதல் ஐஏடிஐ (IADT) சோதனை வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வெற்றி தொடர்ந்து இன்று ஐஏடிஐ-02 (IADT-02) சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக இந்திய விமான படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 5.7 டன் எடையுள்ள விண்கல மாதிரி 3 கி.மீ உயரத்தில் இருந்து கீழே விடப்பட்டது.
விண்கலத்தின் வேகத்தை குறைக்க 10 பாராசூட்கள் வரிசையாக விரிந்து, பாராசூட்கள் மூலம் வேகம் குறைக்கப்பட்ட விண்கல மாதிரி, கடலில் பாதுகாப்பாக இறங்கியது. பின்னர் அது இந்திய கடற்படையின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது.
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலத்தின் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் வெற்றிகரமாக சோதனை செய்யபட்டது.
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தள பதிவில் கூறுயதாவது:-
அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான்கான இரண்டாவது ஒருங்கிணைந்த வான்வழி வீழ்ச்சி சோதனையை ஐஏடிஐ-02 (IADT-02) வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக இஸ்ரோவிற்கு பாராட்டுகள்.
இந்த இரண்டாவது ஒருங்கிணைந்த வான்வழி வீழ்ச்சி சோதனையானது ஐஏடிஐ-02 (IADT-02), ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ககன்யான் திட்டத்திற்கான தயார்நிலையை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாக இது அமைகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.