தேசிய செய்திகள்

போர் பதற்றத்துக்கு மத்தியிலும் நாட்டின் உற்பத்திதுறை வளர்ச்சி: கடந்த மாதம் 54.70 புள்ளிகளாக உயர்வு

இது அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 53.9 புள்ளிகளை காட்டிலும் 0.8 புள்ளிகள் அதிகமாகும்.

புதுடெல்லி,

இந்தியாவின் உற்பத்தித்துறை என்பது பொருளாதாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இது மூலப்பொருட்களை தயாரிப்புகளாக மாற்றி, வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

"மேக் இன் இந் தியா" போன்ற முயற்சிகள் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து, இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்ற உதவுகிறது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வருமான உயர்வு, ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் பொருளாதார தன்னிறைவு ஆகியவை ஏற்பட்டு, நாட்டின் மொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு உற்பத்தித் துறை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

தனியார் வங்கியான எச்.எஸ்.பி.சி. மாதந்தோறும் பொருளாதாரத்தின் தூண்களான விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைத்துறைக்கான குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதத்துக்கான உற்பத்திதுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மாதத்தில் நாட்டின் உற்பத்தித்துறையின் மொத்த செயல்பாடு குறியீடு 54.7 புள்ளிகளை பெற்று உயர்ந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 53.9 புள்ளிகளை காட்டிலும் 0.8 புள்ளிகள் அதிகமாகும். இது மொத்த செயல்பாட்டு சூழலில் நான்கு ஆண்டுகளில் இரண்டாவது மெதுவான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

புதிய ஆர்டர்கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு, வழங்குநர் வினியோக நேரம் மற்றும் கொள்முதல் கையிருப்பு போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் உற்பத்தித்துறை மொத்த செயல்பாடு குறியீடு கணக்கிடப்படுகிறது.

இதுகுறித்து எச்.எஸ்.பி.சி வங்கியின் முதன்மை அதிகாரி பிரஞ்சுல் பண்டாரி கூறுகையில், "போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் நாட்டின் உற்பத்தித் துறை உயர்ந்துள்ளது. உற்பத்தி, புதிய ஆர்டர்கள் (ஏற்றுமதிகள் உள்பட) மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை மிதமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதால், இந்திய உற்பத்தித் துறையின் நிலைத்தன்மை தொடர்கிறது" என்றார்.

மத்திய கிழக்கு போர் காரணமாக பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் 44 மாதங்களில் மிக வேகமாகவும், தயாரிப்பு விலைகள் 6 மாதங்களில் மிக வேகமாகவும் உயர்ந்தன. மொத்த பண வீக்க விகிதம் ஆகஸ்டு 2022-க்கு பிறகு அதிகபட்ச நிலையை எட்டியது. இதன் விளைவாக, உற்பத்தியாளர்கள் கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவில் தங்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர்.