சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) குறைவான எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2 டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதைவிட அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது.
இந்த வகை ராக்கெட்டின் முதல் பயணம் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மாலை 5:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
இதில் எடுத்து செல்லப்பட்ட ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது ஆகும். நவீன வசதிகளுடனான தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டு உள்ளது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும்.
பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும். இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டெனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.