லக்னோ
உத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
இதன்பின்னர் அவர் கூடியிருந்த திரளான கூட்டத்தினரின் முன் பேசும்போது, இந்த நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் புதிய வலிமை என அவர் குறிப்பிட்டார். இந்த விமான நிலையம் மாநிலத்திற்கு வளர்ச்சி ஊக்கியாக இருப்பதுடன், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளையும் உருவாக்கி தரும்.
இதனால் ஆக்ரா, மதுரா, மீரட், இடாவா மற்றும் காசியாபாத் போன்ற சுற்று வட்டார நகரங்களும் பயன் பெறும் என்று கூறினார். நாட்டின் மிக பெரிய மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களை கொண்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது என்று கூறினார்.
மேற்காசிய மோதலால் உலக நாடுகள் உணவு, எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளால் சிக்கி தவித்து வரும்போது, இந்த நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. மக்கள் மற்றும் விவசாயிகள் மீது இந்த சுமை விழாமல் அரசு கவனத்துடன் உறுதி செய்து வருகிறது என்றும் கூறினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், உலகளாவிய விமான நிலைய மையம் என்ற இந்தியாவின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையாக இது இருப்பதுடன், மண்டல மற்றும் சர்வதேச இணைப்பை அதிகரிக்கும் வகையிலும் அது இருக்கும். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்து, நொய்டா சர்வதேச விமான நிலையம் 2-வது பெரிய சர்வதேச விமான நிலையம் என்ற அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனால், டெல்லி நகரானது உலகளாவிய விமான நிலைய மையங்களில் முன்னணி பெற்ற நகராக இருக்கும். இந்த இரு விமான நிலையங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, ஒட்டுமொத்தத்தில் நெருக்கடி குறைவதுடன், பயணிகளை கையாளும் திறனும் விரிவடையும். இந்தியாவின் பெரிய பசுமைவெளி விமான நிலையங்களில் ஒன்றான இது, ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளை தொடக்கத்தில் கையாள்வதுடன், முழு அளவில் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை 7 கோடியாக அதிரிக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.