புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 3-ந் தேதி நடந்தது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது தெரிய வந்ததால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மராட்டிய மாநிலம் நாக்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அகான்ஷா சதுர்வேதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“அகான்ஷா டாக்டர் ஆகி, நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்ய விரும்பினார். அவரது தந்தை ஒரு விவசாயி. டாக்டர் ஆகும் மகளின் கனவை நிறைவேற்ற அவர் விவசாயி கள் கடன் அட்டையை வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கினார்.
நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் அகான்ஷா படிப்பதற்கு வசதியாக அவரது தந்தை நாக்பூரிலேயே சமையல்காரர் வேலையில் அமர்ந்தார்.
ஒரு தந்தையாக அனைத்து கடமைகளையும் செய்தார். ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து விட்டது. தேர்வும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிச்சயமற்ற நிலைக்கிடையே அகான்ஷா நம்மை விட்டுச்சென்று விட்டார்.
அகான்ஷாவின் மரணம் ஒரு தற்கொலை அல்ல. பிரதமர் மோடி தலைமையிலான ஊழல் மற்றும் சிதைந்துபோன அமைப்பின் துயர வெளிப்பாடு.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது இருக்கையில் உறுதியாக அமர்ந்துள்ளார். அதே கமிட்டிகள், அதே இட மாற்றங்கள், அதே விசாரணைகள் என தொடர்கிறது. எந்த சீர்திருத்தமோ, நீதியோ இல்லை. பிரதமர் மோடி அவர்களே, அதிகாரம் நிலையானது அல்ல. அது வரும், போகும். ஆனால், நீங்கள் கடந்த 12 ஆண்டுக ளாக கல்வி முறையை சீரழித்ததற்கு ஒட்டுமொத்த இந்திய இளம் தலைமுறையும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.