ஐஎன்எஸ் சமர்த்தக்  
தேசிய செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் சமர்த்தக் கப்பல் - இந்திய கடற்படையில் இணைப்பு

தனியார் கப்பல் கட்டும் தளத்தால் கட்டமைக்கப்பட்ட முதல் பெரிய போர்க்கப்பலாக இது அமைந்துள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பல்நோக்கு் கப்பலான ஐஎன்எஸ் சமர்த்தக் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

ஐஎன்எஸ் சமர்த்தக்

இந்திய பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் இந்திய கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பல்நோக்குக் கப்பல் வரிசையில் முதலாவதான 'ஐஎன்எஸ் சமர்த்தக்' (INS Samarthak) போர்க்கப்பல் நேற்று முறைப்படி கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

துணை ஜனாதிபதி பங்கேற்பு

நிகழ்விற்கு இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, கப்பலை முறைப்படி கடற்படை பணியில் அர்ப்பணித்தார். இந்த விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், கர்நாடக மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி, கடற்படை மற்றும் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தனியார் துறை

'ஐஎன்எஸ் சமர்த்தக்' கப்பலானது இந்தியாவின் புகழ்பெற்ற எல்&டி (L&T) கப்பல் கட்டும் தளத்தால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டுமான பயணத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். ஏனெனில், ஒரு இந்திய தனியார் கப்பல் கட்டும் தளத்தால் கட்டமைக்கப்பட்ட முதல் பெரிய போர்க்கப்பலாக இது அமைந்துள்ளது.

பல்நோக்குத் திறன்

இக்கப்பல் கடற்படையின் பல்வேறு வகையான போர்க்கால மற்றும் அமைதிக்கால நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத்தக்க வகையில் பல்நோக்கு திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல் பணியில் சேர்க்கப்பட்டிருப்பது, நாட்டின் தனியார் கப்பல் கட்டுமான துறையின் வளர்ந்து வரும் முதிர்ச்சியையும், உலகத்தரம் வாய்ந்த திறனையும் பறைசாற்றுகிறது.

ஆழமான ஒருங்கிணைப்பு

மத்திய அரசின் 'தற்சார்பு இந்தியா' தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து செல்வதில், இந்திய கடற்படைக்கும் உள்நாட்டு தனியார் கப்பல் கட்டுமான துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஆழமான ஒருங்கிணைப்பை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது.

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், அதுவும் தனியார் பங்களிப்போடு உருவாகியுள்ள 'ஐஎன்எஸ் சமர்த்தக்', இந்தியப் பெருங்கடலில் நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT