ராஜ்நாத் சிங்  
தேசிய செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

இந்திய கப்பல் கட்டும் தளங்கள் சர்வதேச அளவில் தரம், தொழில் நுட்பம், குறித்த நேரத்தில் விநியோகம் செய்வதில் போட்டிதன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம்,

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆதரவு கப்பல் சூர்யா

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், ஐந்தாவது கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியையும் தொடங்கி வைத்த அவர், மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே-4 ,300 டன் திறன் கொண்ட கோலியாத் கிரேன் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

உற்பத்தி திறன்

இந்நிகழ்ச்சியில் பேசிய மந்திரி, கடற்படை ஆதரவுக் கப்பல்-1 திட்டம் சாதனையின் சின்னம் என்றும் கடற்படை ஆதரவுக் கப்பல்-5-ன் தொடக்கம் நமது உறுதியின் அடையாளம் என்றும், புதிய ஸ்லிப்வே நமது வளர்ந்து வரும் உற்பத்தித் திறனின் சான்று என்றும் குறிப்பிட்டார். இந்தக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்படையின் செயல்திறனையும், தொலைதூர கண்காணிப்பு மற்றும் தளவாட பராமரிப்பு திறன்களையும் பெருமளவில் மேம்படுத்தும் என்றம் கூறினார்.

தொழில் நுட்பம்

இந்திய கப்பல் கட்டும் தளங்கள் சர்வதேச அளவில் தரம், தொழில் நுட்பம், குறித்த நேரத்தில் விநியோகம் செய்வதில் போட்டிதன்மையுடன் செயல்பட வேண்டும். மேலும் ஆந்திரப் பிரதேசத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து விசாகப்பட்டினத்தை ஒரு முதன்மை கடல்சார் தொழில் மையமாக மாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT