மும்பை,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மராட்டிய மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 192 பேர் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், விமானம் புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி உடனடியாக புனே விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனை தொடந்து காலை 9.04 மணியளவில் விமானம் புனே விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்தவித காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேவேளை, பயணிகளை மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.