பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கி சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கியதில் விமானத்தின் முன்பகுதியில் உள்ள ரேடோம் சேதமடைந்தது. இந்த சம்பவத்தின் போது, 104 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 110 பேர் விமானத்தில் இருந்தனர். மின்னல் தாக்கியதும் அவசரமாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கபட்டது.
மின்னல் தாக்கியதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் லக்னோ விமான நிலையத்தில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. விமான நிறுவனம் பயணிகளுக்காக மற்றொரு விமானத்திற்கு ஏற்பாடு செய்தது. அதனைத் தொடர்ந்து, 104 பயணிகளும் நேற்று மாலை 6:22 மணியளவில் மாற்று விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. தேவையான பராமரிப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்த பிறகே விமானம் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது