அந்தமான்,
ஏ.என்.சி.யின் 25-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, இந்தியக் கடற்படை பாய்மரக் கப்பலான 'நீல்கந்த்'-க்கு ஶ்ரீவிஜயபுரத்தில் பிரம்மாண்டமான கடல்வழி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய பாதுகாப்புப் படைகள் அனைத்தும் அடங்கிய ஒருங்கிணைந்த கமாண்டாக திகழும் அந்தமான் நிகோபார் கமாண்ட் தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி, கடற்படையின் பாய்மரக் கப்பலான 'ஐ என் எஸ் வி நீல்கந்த்,’ விசாகப்பட்டினத்திலிருந்து 700 கடல் மைல் தூரம் கொண்ட சவாலான கடல் பயணத்தை ஶ்ரீவிஜயபுரத்தில் இன்று நிறைவு செய்தது. இதையொட்டி இக்கப்பலுக்கு அங்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2026 செப்டம்பர் 27 அன்று இந்தப் பயணம் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்தப் பயணம் இக்கமாண்டின் முக்கிய விழுமியங்களான 'கூட்டுச் செயல்பாடு, ஒருங்கிணைந்த ஆற்றல், கிழக்குக் கடற்கரையின் பாதுகாவலன்' ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் சவாலான சூழலில் கடல்சார் திறன், வலிமை, ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது முன்னிலைப்படுத்துகிறது.
பாய்மரக் கப்பல் பயணம் என்பது துணிச்சல், சூழல் விழிப்புணர்வு, கடலின்பால் ஈர்ப்பு ஆகியவற்றை முக்கிய தகுதிகளாகக்கொண்ட சவாலான கடல்சார் கலையாகும். சாகச உணர்வை ஊக்குவிப்பதில் இந்தியக் கடற்படை கொண்டுள்ள உறுதிப்பாட்டை 'ஐ என் எஸ் வி நீல்கந்த்'-ன் இந்தப் பயணம் உறுதிப்படுத்துகிறது.
இக்கப்பல் போர்ட் பிளேர் 'பிளாக் பாயிண்ட்' அருகே வந்தபோது, கடலில் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தமான் நிக்கோபார் கமாண்ட் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் வினீத் மெக்கார்ட்டி 'ஜே-24' ரக பாய்மரப் படகில் சென்று இந்நிகழ்வை வழிநடத்தினார். மூன்று 'லேசர்' ரக மற்றும் ஐந்து 'ஆப்டிமிஸ்ட்' ரக பாய்மரப் படகுகள், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் பல இயந்திரப்படகுகள் ஆகியவை அடங்கிய அழகிய அணிவகுப்பை அவர் வழிநடத்தி, கடலில் கூட்டுச் செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தினார்.
இந்தக் கடல்சார் நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஆறு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்கள் இணைந்து, 'ஐ என் எஸ் வி நீல்கந்த்'-ஐ துறைமுகத்திற்குள் அழைத்துச் செல்வதற்கான ஒரு சடங்குபூர்வ 'கௌரவப் பாதையை' உருவாக்கின.
ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள மெரினா பேயில், வைஸ் அட்மிரல் வினீத் மெக்கார்டி, ஐ.என்.எஸ்.வி. நீலகந்த் கப்பலை கொடியசைத்து முறைப்படி வரவேற்றார். 700 கடல் மைல் பயணத்தின்போது கப்பல் குழுவினர் வெளிப்படுத்திய சிறப்பான நிபுணத்துவம், மனவுறுதி மற்றும் பாய்மரப் படகுப் பயண உணர்விற்காக அவர்களைப் பாராட்டினார்.
இந்தப் பயணம், அந்தமான் நிகோபார் கமாண்டின் வெள்ளி விழா செய்தியான – ஒன்றிணைந்து பயணிப்போம், ஒன்றிணைந்து வெல்வோம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.