டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தாமாக முன்வந்து விளக்கம் அளித்தார்.
மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதாவது, இந்திய நுகர்வோரின் நலனே மத்திய அரசின் முக்கியத்துவம். நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை கச்சா எண்ணெய் எரிபொருள் விநியோகம், உலகளாவிய வணிக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கு பதற்றத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த பதற்றம் இந்திய பொருளாதாரம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்படுத்தும் பாதிப்பையும் ஆராய்ந்து வருகிறோம். போர் பதற்றத்தை பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
மத்திய கிழக்கில் நிலைத்தன்மை என்பது சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் , இந்திய பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியம். மத்திய கிழக்கு அமைதியாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மத்திய கிழக்கில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலனிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 67 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்
என்றார்.
அதேவேளை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியை தொடர்ந்து அவை மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.