கொல்கத்தா,
294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
152 தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேற்கு வங்க மாநில முதல்கட்ட தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 92.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலை சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும், வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘வலை ஒளிபரப்பு’ (Web Casting) உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் நடைமுறைகளை பார்வையிட்டனர். தேர்தலின் திறமையான நிர்வாகத்தையும், திருவிழாவைப் போன்ற சூழலையும் அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மேலும், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட ‘வலை ஒளிபரப்பு’ நடவடிக்கைகளையும், அத்துடன் முதிய மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகள், குடிநீர், நிழல் மற்றும் இருக்கை வசதிகள் போன்ற வசதிகளையும் அவர்கள் பாராட்டினர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.