சுப்ரீம் கோர்ட் 
தேசிய செய்திகள்

இணையம் பயன்படுத்த வயது அடிப்படையில் தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதித்தாலும் குழந்தைகள் அதைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுத்துவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்.

புதுடெல்லி:

இணையதளத்தைப் பயன்படுத்துவது குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதுடன், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, குழந்தைகள் உரிமைகளுக்காகச் செயல்படும் பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு மற்றும் 19(1)(ஏ) பிரிவின்படி, இணையத்தை பயன்படுத்தும் உரிமை ஒவ்வொரு தனிநபருக்கும் அடிப்படை உரிமையாகும் . வயது எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கும் இந்த உரிமை உண்டு . குழந்தைகளின் பாதுகாப்பையும் அவர்களின் சுதந்திரத்தையும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கருத முடியாது. இரண்டையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் . குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிப்பதற்குப் பதிலாக, பெற்றோரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் .

மிரட்டலுக்கு ஆளாகும்

இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதித்தாலும் குழந்தைகள் அதைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுத்துவிட முடியாது. இதனால் அவர்கள் பாதுகாப்பற்ற இணையதளங்களை நாடும் அபாயம் உள்ளது.இணையத்தில் பாலியல் சுரண்டல் அல்லது மிரட்டலுக்கு ஆளாகும் குழந்தைகள், இணையப் பயன்பாட்டுக்காகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் போகலாம்

கோர்ட் அறிவுரை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான படங்கள், வீடியோக்கள் மற்றும் இணைய இணைப்புகளைக் கண்டறிந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினர். மேலும், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களின் இணைய முகவரிகள் மற்றும் டிஜிட்டல் அடையாளங்களைக் கொண்ட தேசிய அளவிலான தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT