புதுடெல்லி
மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. விமான போக்குவரத்து ஒருபுறம் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கப்பல் போக்குவரத்தும் கூட மறுபுறம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதிலும், சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களின் இயக்கம் பாதிக்கும்போது அது உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.
இந்த சூழலில், வர்த்தக துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுடனும் இன்று ஆலோசனை மேற்கொண்டது. அப்போது இந்தியாவின் ஏற்றுமதி சூழல், சரக்குகளின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் போன்றவை பற்றியும் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், 8 வாரங்களுக்கு தேவையான கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு நம்மிடம் உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என அரசு கூறியுள்ளது. மேற்காசிய நாடுகளிடம் இருந்து பெரிய அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய கூடிய நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி ஹார்முஜ் ஜலசந்தி வழியே நடைபெறுகிறது. மீதமுள்ள 60 சதவீத கச்சா எண்ணெய் உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஹார்முஜ் ஜலசந்தி வழியே வரும் கச்சா எண்ணெய் தடைபட்டால் அவற்றை எதிர்கொள்வது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டது.
இந்த நிலையில், சரக்கு போக்குவரத்து பற்றிய சரியான கணிப்பு, காலதாமதங்களை குறைத்தல், ஏற்றுமதியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையே தடையற்ற ஆவணங்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறைகளை மேற்கொள்வது உறுதி செய்யப்படுதல் ஆகியவை பற்றி இன்று ஆலோசிக்கப்பட்டு உள்ளது என வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.