தேசிய செய்திகள்

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: நாடுமுழுவதும் இன்று 444 விமானங்கள் ரத்து

காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது.

புதுடெல்லி,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்தன. அதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார். காமேனி கொல்லப்பட்டதை ஈரானும் உறுதி செய்துள்ளது. ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. அதோபோல ஒருவாரத்திற்கு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் நாளை மறுநாள் (மார்ச்.03) காலை 10 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய், பஹ்ரைன், தோஹா, சார்ஜா, அபுதாபியில் இருந்து சென்னைக்கு நாளை மறுநாள் காலை வரை விமானங்கள் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும் விமானங்களும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பதற்றமான சூழல் காரணமாக தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டினரும், தங்கள் விசா நீட்டிப்பு தொடர்பான உதவி தேவைப்பட்டால், அருகிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.