தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் இரும்புப் பாலம் இடிந்து விழுந்து விபத்து... லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு!

2 லாரிகள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே பாக்ரா கால்வாயின் குறுக்கே அமைந்திருந்த இரும்புப் பாலம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 லாரிகள் இடிபாடுகளில் சிக்கின. இதில் ஒரு லாரியில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென இடிந்து விழுந்த பாலம்

பாட்டியாலா - சங்ரூர் புறவழிச்சாலையில் உள்ள பாசியானா கிராமம் அருகே இந்த இரும்புப் பாலம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 2 லாரிகள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இதில் 2 லாரிகளும் இடிந்து விழுந்த பாலத்தின் பகுதியில் சிக்கிக்கொண்டன.

ஒரு லாரியில் தீ விபத்து

இந்த விபத்தைத் தொடர்ந்து ஒரு லாரியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மேலும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது.

உயிரிழப்பு இல்லை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

இந்த விபத்தால் பாட்டியாலா - சங்ரூர் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT