புதுடெல்லி,
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய்(83). கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி ரகு ராய், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரகு ராய் இன்று உயிரிழந்தார்.
கடந்த 1942-ம் ஆம் ஆண்டு, தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் ஜங் பகுதியில் பிறந்த ரகு ராய், 1965-ல் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1982-ல் ‘இந்தியா டுடே’ இதழில் 10 ஆண்டுகள் புகைப்பட ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவரின் புகைப்படங்கள் பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
புகழ்பெற்ற மேக்னம் போட்டோஸ் நிறுவனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய புகைப்படக் கலைஞர் இவர்தான். இந்தியாவின் கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தருணங்களைத் தனது கேமரா கண்களால் ஆவணப்படுத்தியவர் என்று ரகு ராய் போற்றப்படுகிறார்.
இந்நிலையில் ரகு ராய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரகு ராய் அவர்கள், தனது லென்ஸ் மூலம் இந்தியாவின் துடிப்பைப் படம்பிடித்த ஒரு படைப்பாற்றல் மிக்க ஆளுமையாக நினைவுகூரப்படுவார். அவரது புகைப்படங்கள் அசாதாரணமான உணர்திறன், ஆழம் மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தன. அவை இந்திய வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு நெருக்கமாக மக்களை கொண்டு வந்தன.
அவரது மறைவு, புகைப்பட மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில், ரகு ராயின் குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் சக புகைப்படக் கலைஞர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.