தேசிய செய்திகள்

ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மகளை வீடுபுகுந்து பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் - டெல்லியில் பயங்கரம்

ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மகளை கொலை செய்வதற்கு முந்தைய நாள் மற்றொரு பெண்ணை ராகுல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகி வந்தார்.

அந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் வீட்டில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராகுல் மீனா(வயது 19) என்ற இளைஞர் வேலைக்கு சேர்ந்தார். அந்த இளைஞர் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரி வேலையை விட்டு நிறுத்தினார்.

அதே சமயம், ராகுல் அந்த வீட்டில் பணிபுரிந்த சமயத்தில் ஐ.ஆர்.எஸ். அதிகாரியும், அவரது மனைவியும் தினமும் காலை உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே செல்வதையும், அந்த சமயத்தில் அவர்களின் மகள் வீட்டில் தனியாக இருப்பதையும் கவனித்துள்ளார். இந்நிலையில், தன்னை வேலையை விட்டு நிறுத்திய அதிகாரியின் வீட்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் ராகுல் சென்றுள்ளார்.

அவர் எதிர்பார்த்ததுபோல் அந்த நேரத்தில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். தன்னிடம் இருந்த மாற்று சாவியை வைத்து வீட்டிற்குள் நுழைந்த ராகுல், அந்த பெண்ணை தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் மயக்கமடைந்த நிலையில், அவரை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்று மயக்கடைந்த நிலையிலேயே அந்த பெண்ணை ராகுல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர் சார்ஜர் கேபிள் வயரைக் கொண்டு அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பணம், நகைகளை திருடிக் கொண்டு ராகுல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இவையனைத்தும் அதிகாலை 6.50 மணி முதல் 7.20 மணி வரையிலான காலகட்டத்திற்குள் நடந்துள்ளன.

ஐ.ஆர்.எஸ். அதிகாரியும், அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகள் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளி ராகுலை அடையாளம் கண்டனர். பின்னர் அவரது இருப்பிடத்தை கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதற்கிடையில், ராகுல் மீது ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராஜ்கார் காவல் நிலையத்தில் மற்றொரு புகார் பதிவாகி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அதாவது ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மகளை கொலை செய்வதற்கு முந்தைய நாள்(செவ்வாய்க்கிழமை) இரவு, ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் ராகுல் தங்கியிருந்துள்ளார்.

அங்கு அவரது நெருங்கிய நண்பருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல், நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறி, நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த நண்பரின் மனைவி தனியாக இருந்த நிலையில், அவரை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி டெல்லி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணை காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, மறுநாள் காலை, தான் பணியாற்றிய வீட்டிற்கு சென்று அங்கிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த ராகுல், துவாரகா பகுதிக்கு தப்பிச் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

ராகுலின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று அதிரடியாக அவரை கைது செய்தனர். தொடர்ந்து ராகுலிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.