பெங்களூரு,
பெங்களூருவில் சொத்துவரி உயர்த்தப்படுகிறதா என்று கேள்விக்கு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பதிலளித்தார். பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் சொத்துவரியை அதிகரிக்க மாட்டோம். பெங்களூருவில் மொத்தம் 36 லட்சம் சொத்துகள் உள்ளன. அதில் 16 லட்சம் சொத்துகளின் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்துகிறார்கள். மீதமுள்ளவர்கள் வரி செலுத்துவது இல்லை. அவர்களை கண்டறிந்து சொத்துவரி வளையத்துக்குள் கொண்டு வருவோம்.
டிரோன், ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் அளவீட்டு பணிகளை மேற்கொண்டு சொத்துவரி ஏய்ப்பாளர்கள் கண்டறியப்படுவார்கள். சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. சொத்துவரி குறைவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் சொத்து உரிமையாளர்கள் தவறாமல் வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் சொத்துவரியை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் வரி செலுத்தும் போது நாமும் வரி செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும். வரி செலுத்தாதவர்கள் குறைந்தபட்சமாவது வரி செலுத்த முன்வர வேண்டும். பெங்களூருவில் காலி வீட்டுமனை உரிமையாளர்கள் அவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இதை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பெருநகர பெங்களூரு ஆணையம் அந்த காலி வீட்டுமனைகளை சுத்தம் செய்து அவற்றுக்கான செலவை அதன் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.