பெங்களூரு,
கர்நாடக மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
2026-2027-ம் நிதி ஆண்டில் வணிக வரி வருவாய் இலக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கலால் துறையில் பணியிடமாற்றம் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்.
மதுபானத்தில் லிட்டர் அளவை கணக்கிட்டு அத்ற்கு தகுந்தார்போல் கலால் வரியை நியமிக்கும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும்.
அது அடுத்த 3 முதல் 4 ஆண்டுகள் அமலில் இருக்கும். இதன்மூலம் விலை நிர்ணயம் 16 நிலைகளில் இருந்து 8 நிலைகளாக மாறும். கலால் துறையில் 2026-2027-ம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்காக ரூ.45 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் முத்திரை மற்றும் பத்திர பதிவுத்துறையில் ரூ.29 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை எட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் போக் குவரத்து துறையில் ரூ.15 ஆயிரத்து 500 கோடி வரி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
கனிம வளத்துறையில் காப்புரிமை மூல கிடைக்கும் வருவாய் ரூ.11 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026-2027-ம் ஆண்டுக்கான மாநில வருவாய் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 50 கோடியாக கணக் கிடப்பட்டு உள்ளது. இதில் மாநில வரி வருவாய் மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், வரி அல்லாத வருவாய் மூலம் ரூ.16 ஆயிரம் கோடியும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய வரிப்பகிர்வு உள்ளிட்ட நிதிகள் மூலம் ரூ.79 ஆயிரத்து 50 கோடியும் அடங்கும்.
மேலும் ரூ.1 லட்சத்து 32 அயிரம் கோடி நேரடி கடனும், முதலீட்டு கடன் மூலம் ரூ.190 கோடியும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 240 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் மொத்த செலவினங்கள் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 4 கோடி ஆகும். இதில் மாநிலத்து வருவாய் பற்றாக்குறை ரூ.33 ஆயிரத்து 957 கோடியாக உள்ளது. மொத்த நிதி பற்றாக்குறை ரூ.97 ஆயிரத்து 449 கோடி ஆகும். அதுபோல் மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்து 389 கோடியாக உள்ளது.
மாநிலத்தின் மொத்த கடன் மற்றும் நிதி பற்றாக்குறை இரண்டும் கர்நாடக நிதி பொறுப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவில் தான் இருக்கிறது. இதன்மூலம் மாநில அரசு நிதி மேலாண்மையை பொறுப்புடன் நிர்வ கித்து வருவதை உறுதி செய்கிறது.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
கலால் வரி மாற்றி அமைக்கப்படுவதன் மூலம் மதுபான விலை உயரும் என்று முதல்-மந்திரி சித்தராமையா சூசகமாக பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.