தேசிய செய்திகள்

சில்லரை கொடுக்காததால் பஸ்சில் பயணித்த மந்திரிக்கே இந்த நிலைமையா...? - வைரல் வீடியோ

மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.

பெங்களூரு,

மாநகர பஸ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இங்கு சுமார் 6 ஆயிரத்து 500 பெங்களூரு மாநகர போக்குவரத்து (பி.எம்.டி.சி.) பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆண்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கிறார்கள். இந்த பஸ்களில் கண்டக்டர்கள் சிலர், சரியான சில்லரை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் பலர் சில்லரை இல்லாமல் ரூபாய் நோட்டுகளை வழங்கி டிக்கெட் பெறுகிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் பிறகு கொடுப்பதாக கூறிவிட்டு கண்டக்டர்கள் ஏமாற்றுவதாகவும் புகார்கள் உள்ளன. சில பகுதிகளில் சில்லரை இல்லாத பயணிகளை கீழே இறக்கிவிட்டு செல்லும் நிகழ்வுகளும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

மந்திரி பயணம்

இந்த புகார்களை அடுத்து போக்குவரத்து மந்திரி பைரதி சுரேஷ் இரவில் பி.எம்.டி.சி. பஸ்சில் பயணம் செய்தார். அவர் தன்னுடன் ஒருவரை அழைத்து சென்றார். அவர் ஹெப்பாலில் ஒரு பஸ்சில் ஏறினார். தான் போக்குவரத்து மந்திரி என்பது தெரியக்கூடாது என்று அவர் தனது முகத்தை முககவசம் கொண்டு மூடிக் கொண்டார்.

அங்கு வந்த கண்டக்டரிடம் ரூ.100 கொடுத்து நாகசெட்டிஹள்ளிக்கு செல்ல 2 டிக்கெட் வழங்குமாறு கோரினார். அவர் மந்திரி என்று தெரியாத அந்த கண்டக்டர், அவரிடம் சரியான சில்லரை கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கீழே இறங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தன்னிடம் சில்லரை இல்லை என்று பைரதி சுரேஷ் கூறினார். இதை ஏற்க மறுத்த கண்டக்டர், பஸ்சை நிறுத்தி பைரதி சுரேஷ் மற்றும் அவரது நண்பரை கீழே இறக்கிவிட்டார்.

பணியிடை நீக்கம்

மேலும் இன்னொரு பஸ் ஒன்று பன்வேர்ல்டு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த ஒரு பயணி பஸ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டதை அவர் கவனித்தார். மந்திரி பைரதி சுரேஷ் பஸ்சை விட்டு இறங்கியதும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் அழைத்து பேசினார்.

தான் பஸ்சில் பயணித்தது குறித்தும், கண்டக்டர் சில்லரை இல்லாததால் தன்னை கீழே இறக்கிவிட்டது குறித்தும், ஒரு பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது குறித்தும் கூறினார். மேலும் அந்த பஸ்சின் கண்டக்டர், டிரைவரை பணியிடை நீக்கம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இவ்வாறு அவர் 2 மணி நேரம் 10 பஸ்களில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார். மாநகர பஸ்களில் மந்திரி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT